search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோ தங்கராஜ்"

    • ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
    • தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இன்று பால் உற்பத்தியாளர்களுக்கு கடன்கள், மானிய உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 73 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பால் உற்பத்திக்கு முதுகெலும்பாக பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தேவையானது அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் பால் உற்பத்தி குறையும் சூழல் இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இதே நிலை இருக்கிறது. ஆகவே பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது.

    ஆகவே தேவைகளை பூர்த்தி செய்ய பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆவின் நிறுவனத்தைப் பற்றி தெரியாமல் சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் அதன் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆவின் நிறுவனம் என்பது, இரண்டு நோக்கங்களை கொண்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்க வேண்டியதும், வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான பாலை வழங்குவதும் தான் அந்த இரண்டு நோக்கங்கள்.

    இந்த ஆவின் நிறுவனத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பால் உற்பத்தியாளர்களாகவும், 35 ஆயிரம் பணியாளர்களும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் உள்ள ஒரு மிகப்பெரிய வலுவான அமைப்பாக உள்ளது. இந்த ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

    அதன்படி பால் உற்பத்தியை பெருக்குவதற்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்குவதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கடன் உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மதுரையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.55 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    ஆவின் நிறுவனத்தை பொருத்தமட்டில் பால் உற்பத்தி அதிகமானாலும், குறைந்தாலும் ஒரு நிலையான விலையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் அவ்வாறு வழங்குவதில்லை. தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது. அதனை 70 லட்சம் உயர்த்தி கையாளும் திறனாக மேம்படுத்த பணி தொடங்கியுள்ளது.

    இந்த ஆவின் நிறுவனத்தை மெருகூட்ட பல தெளிவான, தீர்க்கமான தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிச்சயமாக வருங்காலத்தில் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுவிடும். அதேபோன்று விவசாயிகளும் உற்பத்தி செலவீனம் அதிகரித்து விட்டதால் பாலின் கொள் முதல் விலையை உயர்த்த கேட்டிருக்கிறார்கள். இதனை முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க இந்த அரசு நிச்சயம் பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் பால் கொள்முதல் 28 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட் டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கேட்பது நியாயமானது. தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். தனியார் நிறுவனத்தை கண்டு ஒரு அரசாங்கம் அச்சப்படாது. இருக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே தனியார் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றார்.

    • குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    கன்னியாகுமரி:

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் நினைவு தினம் இன்று அனு சரிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கலெக்டர் ஸ்ரீதர், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, நேச மணியின் பேரன் ரஞ்சித் அப்பல்லோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் மார்சல் நேசமணி. அவருடன் பயணித்த பல்வேறு தலைவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியான தியாகங்கள், தியாக செம்மல்களை வணங்குகிறேன்.

    தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    இந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை பெருக்குவதுடன் பொதுமக்களுக்கு தரமான பால் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஆவின் விலை ரூ.30 குறைத்ததுடன் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 அதிகமாக வழங்கினார். தற்பொழுது ஆவினில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆவின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து கூறுவது அவரவர் அடிப்படை உரிமை என்று கூறினார்.

    • பால் என்பது மிக முக்கியமான உணவுப்பொருள்.
    • ஆவினை பொறுத்தமட்டில் பொருளாதார சிக்கல் எதுவும் இல்லை.

    சென்னை :

    சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவினில் தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறன் உள்ளது. மாநிலத்தின் தேவையை அடிப்படையாக கொண்டு பார்த்தால், தினசரி 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறன் வேண்டியது உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறனை ஏற்படுத்த கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள இருக்கிறோம்.

    தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறனை ஏற்படுத்தும் போது அதற்கு நிகராக பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகளை வழங்க உள்ளோம்.

    கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆவினை பொறுத்தமட்டில் பொருளாதார சிக்கல் எதுவும் இல்லை. இதனால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள நிதி தடையாக இருக்காது. தற்போதுள்ள சூழ்நிலையில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டியது உள்ளது.

    உரிய அனுமதி இல்லாமல் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை நடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த விலையில் பாலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

    பால் என்பது மிக முக்கியமான உணவுப்பொருள். எந்தவித வேதிப்பொருட்கள் கலப்படமும் இல்லாமல் பால் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.

    எனவே, பாலில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பொருட்களின் தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளோம்.

    உணவுப்பொருள் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆவின் மூலம் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வது குறித்தும் முடிவெடுப்போம். எந்தவித காலதாமதமும் இன்றி பொதுமக்களுக்கு பால் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பால் வினியோகத்தை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சுப்பையன் உடன் இருந்தார்.

    இதைத்தொடர்ந்து ஆவின் பொதுமேலாளர்கள், அனைத்து மாவட்ட துணை பதிவாளர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    • தமிழகத்தில் கிராமிய கலைகளை மீட்டெடுப்போம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
    • கிராமிய கலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

    மதுரை

    தமிழ்நாடு கிராமிய கலைஞர் மற்றும் கலைத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது.

    இதில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தாயன்பன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநில தலைவர் சோமசுந்தரம், தென்னக பண்பாட்டு மையம் இயக்கு னர் கோபாலகிருஷ்ணன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராமிய கலைஞர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நையாண்டி மேளம், கட்டை கால் ஆட்டம், நாதஸ்வரம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஆடியபடி பேரணியாக வந்தனர். இதனை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அனீஸ்சேகர், பூச்சி முருகன் ஆகியோர் தனி மேடையில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக கிராமிய கலைகள் திகழ்ந்து வருகின்றன.

    பொதுவான கருத்துக்களை மற்றவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறும் வல்லமை கிராமிய கலைகளுக்கு உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராமிய கலைகளை பாது காக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

    இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றை மீட்டெ டுக்கும் விதமாக அந்த துறையை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

    • திருமண மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
    • மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெசீம், மயிலாடி பால் பண்ணை தலைவர் பெருமாள், மயிலாடி பேரூர் தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் உள்ள ஒய்-48 மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மேயர் மகேஷ் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் நாகராஜன், துணைப் பதிவாளர்கள் கனகசுந்தரி, சங்கரன் (நாகர்கோயில் சரகம்) குருசாமி (பொது விநியோகத்திட்டம் நாகர்கோவில்),

    மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெசீம், மயிலாடி பால் பண்ணை தலைவர் பெருமாள், மயிலாடி பேரூர் தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×